அரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு கொடுக்க வேண்டும்! சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த அருட்தந்தை

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அனுராதபுரம் சிறைச் சாலையில் கடந்த 29 நாட்களாக 11 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

அவர்கள் தனிப்பட்ட விடயங்களுக்காக போராட்டம் நடத்தவில்லை. தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த விடயங்களுக்காக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த விடயங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்காற்றியமையால் அவர்கள் இன்று சிறைகளில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடவேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. 2015ஆம் ஆண்டு 9ஆம் மாதம் மகசீன் சிறைச்சாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் அரசின் மீதும், அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையிலேயே அரசியல் கைதிகள் இன்று போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக குறிப்பிடும்போது,

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு பொது மன்னிப்பு குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

பொதுமன்னிப்பு யாரிடம் கேட்க வேண்டும்? தமிழ் மக்களை அழித்தவர்களிடம் பொதுமன்னிப்பு கேட்பதா?

இதுவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு? மன்னிப்பு கேட்பதாக இருந்தால் அவர்கள் போராட்டாத்திற்கு கொடுத்துள்ள விலை என்ன? ஆகவே மன்னிப்பு என்பது தேவையற்றது.

எந்த நிபந்தனையும் இல்லாமல் சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும். இதேபோல் புனர்வாழ்வு குறித்தும் பேசுகிறார்கள். யாருக்கு புனர்வாழ்வு? அரசியல் கைதிகளுக்கா? அரசியல்வாதிகளுக்கா? உண்மையில் அரசியல்வாதிகளுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களுக்கு புறம்பாக அல்லது தமிழர்களின் அபிலாஷைகளுக்கு புறம்பாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக மக்கள் இவ்வாறானவர்களுக்கு தேர்தல் ஊடாக புனர்வாழ்வு கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து தொடர்பாக குறிப்பிடும்போது,

இராணுவத்திற்கும், அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு வழங்குவது குறித்து பேசப்படுகின்றது. அப்படியானால் இராணுவம் யுத்த குற்றங்களை செய்தது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். அந்த யுத்தக் குற்றங்களை செய்தவர்கள் யார்?

அவர்களுடைய பதவி நிலைகள் என்ன? அவ்வாறான குற்றங்களை புரிந்தவர்களுக்கு விசாரணைகள் நடந்துள்ளதா? தண்டணைகள் விதிக்கப்பட்டுள்ளதா? புனர்வாழ்வு வழங்கும் நிலையில் அவர்கள் உள்ளார்களா? என்பதையும் அரசாங்கம் கூறவேண்டும்.

நாங்கள் கூறும் எங்களுடைய அரசியல் கைதிகள் நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள்.

ஆகவே 107 தமிழ் அரசியல் கைதிகளை வைத்து இராணுவத்தை பாதுகாப்பதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. அவர்களை பலிக்கடாக்களாக பயன்படுத்த கூடாது.

அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக குறிப்பிடும்போது,

கடந்த வருடமும் வரவு செலவு திட்டம் வந்தபோது நான் இரா.சம்பந்தனை சந்தித்து அரசியல் கைதிகள் விடுதலைக்கான நிபந்தனைகளை விதித்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவை கொடுங்கள் என கேட்டேன்.

ஆனால் அது நடக்கவில்லை. அப்போதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு இல்லை என்பதை காணக்கூடியதாக இருந்தது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வந்தபோது 10 அம்ச கோரிக்கையை தாங்கள் முன்வைத்ததாகவும், அதில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஒரு விடயமும் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதுடன், அதனை பிரதமர் ஏற்றுக் கொண்டு பின்னர் கூட்டம் ஒன்றினைக் கூடுவார். எனவும் கூறப்பட்டது.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் வரவு செலவு திட்டம் வருகிறது. இப்போது அரசியல் கைதிகள் வேறு தங்கள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இந்த முறை வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின்போதாவது இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers