யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனிக்கு வவுனியாவில் அமோக ஆதரவு

Report Print Theesan in அரசியல்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவனி இன்று வவுனியாவில் மாபெரும் ஆதரவுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 09ம் திகதி ஆரம்பமான இந் நடைபவனி 3ஆவது நாளாக நேற்று மாங்குளத்தையும், நேற்றிரவு ஓமந்தையையும் வந்தடைந்துள்ளது.

இதையடுத்து நடைபவனியின் 4ஆவது நாளான இன்று காலை ஓமந்தையிலிருந்து வவுனியா தாண்டிக்குளத்திற்கு வந்தடைந்துள்ளது.

அத்துடன் வவுனியா மக்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் நடைபவனியினருக்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.

தொடர்ந்து வவுனியா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் காலை 10.45 மணியளவில் அனுராதபுரத்தினை நோக்கி புறப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை முன் நிறுத்தியும், அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்வினை பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இப்போராட்டம் கடந்த 9ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு நடைபவனியாக கிளிநொச்சி, மாங்குளம் ஊடாக வவுனியா, ஓமந்தையை வந்தடைந்து இன்று காலை வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், அக்கினிச் சிறகுகள் அமைப்பு, உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், அரசியல் பிரமுகர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அனுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோசங்களை எழுப்பியவாறு ஆரம்பமான இந் நடைபவனிக்கு வவுனியா மக்கள் பெரும் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.