இடைக்கால அரசாங்கம் தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

இடைக்கால அரசாங்கம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் இல்லை என அந்த விடயம் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பமா இல்லையா என்பது சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிய, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியினர் இந்த கூட்டத்தில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, எவ்வாறாயினும் நேற்றிரவு நடந்த கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா,

நேற்றிரவு நடந்த கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி எதுவும் பேசப்படவில்லை எனவும் அரசாங்கத்தினால் அடுத்த 11 மாதங்களில் ஏற்படுத்தப்படும் நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை எவ்வாறு பகிர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து மட்டுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்த கூட்டத்திற்கு முன்னர் நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் நடைபெற்ற வைபவத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இடைக்கால அரசாங்கதை அமைப்பது தொடர்பில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை எனக் கூறியிருந்தார். ஆனால், அப்படியான யோசனை முன்வைக்கப்பட்டால், கட்சி என்ற வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.