இலங்கை அரசுக்கு அதிகளவான பங்குகள் உள்ள இரண்டு நட்சத்திர ஹொட்டல்களை அடுத்த 6 மாதங்களுக்குள் விற்பனை செய்ய உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி சேவை ஒன்றிடம் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு ஹயாட் ஹொட்டல் மற்றும் ஹில்டன் ஹொட்டல் ஆகியவற்றில் அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
458 அறைகள் மற்றும் 100 தொடர்மாடி வீடுகளை கொண்ட ஹயாட் ஹொட்டலின் கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முழு பங்குகளும் அரசுக்கு சொந்தமானது.
ஹில்டன் ஹொட்டலில் 51 வீத பங்குகளை அரசு கொண்டுள்ளது.
இந்த இரண்டு ஹொட்டல்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான பெரிய வணிக நிறுவனங்களின் வெளிப்படை தன்மை, பொறுப்பு மற்றும் செலவுகளில் செயற்திறனை ஏற்படுத்தும், வியூகமான துரித மறுசீரமைப்பு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.