ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பார்க்கும் தனக்கு தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நினைவுக்கு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறை தொடங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கம், வெள்ளி கரண்டியை வாயில் வைத்துக்கொண்டு பிறந்த பிரபு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் அல்ல. அவர் சாதாரண கிராமத்து குடும்பத்தில் பிறந்தவர்.
மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டத்திற்கு வந்த இந்த மனிதனை வீழ்த்தவே எதிராளிகள் முயற்சித்து வந்தனர்.
இதேபோன்ற பொறமை, பகை மற்றும் அரசியல் குறுக்கீடுகளை என் தந்தைக்கு நேர்ந்ததை நான் பார்த்துள்ளேன். இன்று அதேவிதமான தாக்குதல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தொடுக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஐயோ சிறிசேன. அப்பம் சாப்பிட்டு விட்டு காட்டிக்கொடுத்த சிறிசேன என்று கூறினார்கள். அன்று அதிமேதகு ஜனாதிபதி எனக் கூற முடியாதவர்கள். இன்று அவருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றி பேசுகின்றனர்.
இது நாடு மற்றும் மக்கள் மீதுள்ள பாசத்தினால் பேசும் விடயங்கள் அல்ல. உயர் மட்டத்திற்கு சென்ற மனிதாபிமானத்தை வீழ்த்தும் தந்திரமான செயற்பாடு.
மக்கள் ஆணையின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமே அன்றி அரசியல் சதித்திட்டங்களால் அல்ல எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.