போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முதலில் கூறியது ரணில் விக்ரமசிங்கவா?

Report Print Kamel Kamel in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான போரின் போது 40,000 பொதுமக்கள் வடக்கில் கொல்லப்பட்டதாக முதன் முதலாக கூறியது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க என தெரிவிக்கப்படுகிறது.

கொடகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற எளிய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியரும், சிங்கள தேசியவாத செயற்பாட்டாளருமான சன்ன ஜயசுமன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், அண்மையில் நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழர்களுடன் வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தோம்.

அதன் போது 40,000 பேர் உயிரிழந்தார்கள் என நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் என தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினவினோம்.

சாட்சியம் உண்டா என நாம் வினவினோம்? அதற்கு அவர் பதிலளிக்கையில், உங்களது நாட்டில் இவர்தான் முதலில் இது பற்றி கூறினார் என பதலளித்தார்.

நான் நாடு திரும்பியதும் இந்த நாற்பதாயிரம் பேர் உயிரிழந்த கதையை முதலில் யார் கூறினார்கள் என இரண்டு வாரங்களாக தேடிப் பார்த்தேன்.

இந்த தகவலை முதலில் கூறியது யார் தெரியுமா? வேறு யாருமல்ல தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இதனை கூறியுள்ளார்.

எப்போது கூறியிருக்கின்றார்? 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரணில், இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கை மீட்டு, வடக்கை மீட்கும் போர் ஆரம்பிக்கப்பட்ட போது நடைபெற்ற உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள தூதரகமொன்று (அமெரிக்கத் தூதரகம்) தனது தாய் நாட்டுக்கு கேபிள் செய்தியொன்றை அனுப்பியுள்ளது. வக்கிலீக்ஸில் இந்த தகவல் காணப்படுகின்றது, நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மதிப்பீடு செய்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாற்பதாயிரம் என்ற தகவலை எடுத்துக் கொண்டே தாரூஸ்மான் அறிக்கையை தயாரித்தார். வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் சொல்லுவது, இந்த நாட்டின் அப்பாவி மக்களுக்கு இந்த ஆவணம் பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பு கிடையாது.

இவ்வாறான உடன்படிக்கைகள் ஆவணங்களிலிருந்து நாட்டை பாதுகாக்க கூடிய தலைவர் ஒருவரின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.