மகிந்தவை எதிர்க்கும் மைத்திரி அணியினர்!

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகக் கூடாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் ஏற்படுத்திக்கொண்டுள்ள கொள்கை காரணமாக இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனை தோல்வியடையும் அடையாளங்கள் தென்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களில் ஒரு பகுதியினர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைக்கு இவர்களில் சுமார் 20 பேர் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பான யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளவர்கள், தற்போதைய அரசாங்கத்தை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடத்தி செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ள அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான மேலதிக விடயங்களை முன்வைக்க உள்ளதாக 15 பேர் அணியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடைய, இடைக்கால அரசாங்கம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்கும் வரை, அது பற்றி கலந்துரையாடுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் விரும்பவில்லை என்பதால், சுதந்திரக்கட்சி அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்காது என கூறப்படுகிறது.

தேசிய அவசியம் கருதி இடைக்கால அரசாங்கத்தை ஒன்றை அமைக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அது குறித்து இறுதி முடிவுக்கு வந்த பின்னர், தம்முடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் சம்பந்தமான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முன்னர் நம்பிக்கையை உறுதிப்படுத்த இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமானது என மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் விரிவாக கலந்துரையாடி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.