இடைக்கால அரசாங்கம் என்ற கதை பொய்யானது! மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கம் பதவியில் இருக்கும் எனவும், இடைக்கால அரசாங்கம் அமையாது எனவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மொனராகலை - மெல்லகம அன்னாசி பயிரிடும் அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் பற்றியே அனைவரும் தற்போது பேசி வருகின்றனர். அப்படியான ஒன்றை பற்றி எங்களுக்கு தெரியாது.

இந்த கதையை யார் கூறினார் என்றும் எமக்கு தெரியாது. இடைக்கால அரசாங்கம் என்ற கதை பச்சை பொய். அப்படியான அரசாங்கத்தை பற்றி நாங்கள் பேசவுமில்லை.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்.இதனால், இடைக்கால அரசாங்கம் என்ற கதை முற்றிலும் பொய்யானது என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம்.

சிலருக்கு பல்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். அவற்றை கூற சுதந்திரம் இருக்கின்றது. 2020ஆம் ஆண்டு தேர்தல் நடக்கும் வரை ஆட்சி மாறாது.

தேர்தல் ஒன்றின் மூலம் மக்களின் வாக்குகளிலேயே அரசாங்கம் ஒன்று பதவிக்கு வர வேண்டும். வேறு முறைகளில் அரசாங்கங்கள் அமையாது.

தற்போதைய அரசாங்கத்துடன் மற்றும் ஜனாதிபதியுடன் இணைந்து முன்னோக்கி செல்வது குறித்து விரும்பினால் எவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

ஆனால், இடைக்கால அரசாங்கம் என்பது எப்போதும் ஆட்சியமைக்காது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.