அரசியல் கைதிகள் தொடர்பில் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு எதிர்வரும் 17ஆம் திகதி தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது சம்பந்தமாக பேசியதாகவும், பிரதமர் மற்றும் நீதியமைச்சருடன் கலந்துரையாடி எதிர்வரும் 17ஆம் திகதி இந்த விடயம் சம்பந்தமாக முடிவு ஒன்றை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

மேலும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இந்த விடயம் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருந்தது.

இவற்றை கவனத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதி எதிர்வரும் 17ஆம் திகதி எடுக்கும் தீர்மானம் மிகவும் ஆக்கபூர்வமான தீர்மானமாக இருக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய நிலைமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக அனுராதபுரம் மற்றும் மகசீன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளிடம் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.