தோட்ட தொழிலாளர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஹரின்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தில் தொழிலை முன்னெடுக்க விரும்புவதை தவிர்த்துக் கொண்டு பெருந்தோட்டங்களில் தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஊடாக சம்பள உயர்வு விடயம் பேசப்பட்டு வருகின்றது. ஒரு நியாயமான சம்பள உயர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினருக்கு துணையாக இருக்கின்றோம்.

அந்த வகையில் எமது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியாக பதுளை மாவட்ட எம்.பி வடிவேல் சுரேஷ் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இருக்கின்றமையினால் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளம் ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துகின்றோம்.

அமைச்சர் திகாம்பரம் ஆடம்பரமற்ற அமைச்சர். மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சேவையாற்றுவதில் தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.

இவரை அரசியலில் காலடி எடுத்து வைக்கவிடாமல் முட்டை வீசியவர்கள் ஒரு மலசலகூடத்தை கட்டினாலும் சிங்கம் போல் தோற்றமளிக்கும் பதாதைகளை வைத்து வேடிக்கை காட்டுவார்கள்.

ஆனால் அமைச்சர் திகாம்பர்ம அவ்வாறானவர் அல்ல. ஊவா மாகாண மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்யும் நபராக அமைச்சர் திகாம்பரத்தை நாம் பார்க்கவில்லை.

அதேவேளையில் எதிர்வரும் காலத்தில் லெஜர்வத்தை தோட்டத்தில் திறக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்திற்கு பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள ஐ.தே.கட்சியின் உறுப்பினர்களை அழைத்து வந்து அவரின் சேவைக்கு நன்றி தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.