புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! இரா. சம்பந்தன்

Report Print Kumar in அரசியல்
157Shares

தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காண வேண்டும் என்ற அடிப்படையில் தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றுள்ளது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சினால் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 35 மில்லியன் ரூபாய் செலவில் இந்த பொதுச்சந்தைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

இதன் போது உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையினை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

உள்ளுராட்சி மன்றங்கள் பாரிய சேவையினையாற்றும் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த மக்களின் தேவையினை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் மிக முக்கியமான மாவட்டம் ஆகும். வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முக்கியமான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.

அரசியலில் எப்போதும் பேதங்கள் இருக்கும், அரசியலில் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

எவ்விதமான வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எமது மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவதாக இருக்க வேண்டும்.

நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்குள்ள பேதமைகளை பயன்படுத்தாமல் அவற்றினை மறந்து மக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வதன் மூலமே மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்க முடியும்.

தமிழ் மக்கள் பல்வேறு வகையான துன்பங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். எமது பிரதேசத்தில் 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது.

அது பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இன்னும் சாதாரண நிலைக்கு திரும்பவில்லை. இன்னும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

காணாமல்போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணி தொடர்பான பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை, தொழில்வாய்ப்பு தொடர்பான பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை இவ்வாறு பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இது தவிர்க்க முடியாதது. இது யுத்தத்தின் விளைவுகள். இதனை காலப்போக்கில் நாங்கள் தீர்க்க வேண்டும். தீர்த்துக் கொண்டு வருகின்றோம்.

பல விடயங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆட்சிமாற்றம் ஊடாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டும் என்று நினைத்த ஒரு அரசாங்கத்தின் ஜனாதிபதியை பதவியில் இருந்து விரட்டி இன்று வேறுவிதமாக சிந்திக்கக்கூடிய அரசாங்கத்தினை நாங்கள் இன்று அமைத்துள்ளோம்.

ஆனால், அவரின் சேவைகளில் பல குறைபாடுகள் உள்ளது. அது நிறைவு செய்யப்பட வேண்டும். இருக்கின்ற குறைகள் நீக்கப்பட வேண்டும். மக்களுக்கு தேவையானவை வழங்கப்பட வேண்டும். அது அவர்களின் உரிமை.

இன்று அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாங்கள் இந்த அரசாங்கத்தினை ஆதரிக்கின்றோம். சில முக்கியமான விடயங்களுக்கான நாங்கள் அந்த ஆதரவினை வழங்குகின்றோம்.

ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி இந்த அரசாங்கத்தினை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் ஒரு பாரிய பங்களிப்பு செய்தோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அதனை வழங்கினோம்.

இந்த நாட்டில் 2 பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தினை அமைத்ததன் காரணமாக தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில் தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்ற முடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. ஆனால் அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம்.

எமது மக்களின் இறைமை மதிக்கப்பட வேண்டும். இறைமை என்பது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவது, ஜனநாயகத்தினை பயன்படுத்துவது.

இறைமையின் முக்கிய அம்சம் ஆட்சியதிகாரங்களை பயன்படுத்துவது. தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தாங்கள் வாழும் பகுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அபிவிருத்திகளை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த அபிவிருத்திகள் தமிழ் மக்களின் இறைமையின் மூலமாக பெறுவதற்கே நாங்கள் விரும்புகின்றோம். எங்களால் தெரிவுசெய்யப்படும் முதலமைச்சர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையானவற்றை அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

இந்த கருத்தினை சிலரால் புரிந்துகொள்ளமுடியாத நிலையாயிருக்கின்றது. இந்த கருத்தினை புரிந்துகொள்வதற்கு ஒரு அரசியல் சரித்திரம் தேவை. அது எங்களிடம் உள்ளது.

நாங்கள் இந்த நாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகின்றோம். எங்களுக்கு ஒரு பண்பாடு, சரித்திரம், கலாச்சாரம் உண்டு.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கொள்கையினை முன்வைத்து அரசியல் சாசனங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட அந்த ஆட்சி அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

நாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும், புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும்.

அதன் மூலமாக எமது இறைமை மதிக்கப்பட வேண்டும், எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடைய சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாக கருதப்படுவோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மணமுனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபாரன், தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நீண்டகாலமாக திறக்கப்படாத நிலையில் இருந்த இந்த கட்டிட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.