வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு நிராகரிக்குமா? சுமந்திரன் கூறிய தகவல்

Report Print Sumi in அரசியல்
176Shares

வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது.

ஆனால், எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை. எல்லாவற்றினையும் தொட்டுத் தொட்டு, இருக்கின்றார்கள். இன்னும் பூரணமாக முடிக்கவில்லை.

அரசாங்கம் பல விடயங்களை செய்து முடிக்காமல் இருப்பதனால், வரவு செலவு திட்டத்தினை நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் எம்மில் பலர் மத்தியில் இருக்கின்றது.

என்ன நிபந்தனைகள் வழங்க வேண்டும், எவ்வளவு காலக்கெடு வழங்க வேண்டுமென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.

எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பது தெரியாது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், சந்திப்பினை மேற்கொள்வோம் என ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

அதேநேரம், தேவையேற்படின், நீதியமைச்சரையும், சட்டமா அதிபரையும் அழைப்போம் என்றும் கூறியிருக்கின்றார். அந்த கலந்துரையாடல், அன்றைய தினம் நடக்குமா, அல்லுத வேறு ஒரு தினத்தில் நடக்குமா என்பதும் தெரியாது.

எதிர்வரும் 25ஆம் திகதி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து நகர்த்துகின்றோம்.

சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி, அந்தப் பிரேரணையை நகர்த்தவுள்ளோம்.

கடும்போக்கினை உடைய கட்சிகளும், அமைப்புக்களும், குற்றம் புரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றதென்ற பொய்யான பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள்.

அவைகள் திருத்தப்பட வேண்டும். நீண்டகாலமாக தடுப்பில் இருக்கின்றார்கள் என்றும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, தண்டணை விதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக தடுப்பில் இருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிணை வழங்க முடியாதென்பதாலும், ஏற்கனவே, நீதிமன்ற விசாரணைகளின்றியும், சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களை விடுவிக்கும் படியாக கேட்கின்றோம்.

தம்மை வெறுமனவே விடுவிக்குமாறும், அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. குற்றத்தினை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலம் சிறையில் இருப்பதனால், அதனைக் கருத்திற்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இந்த உண்மைகளை சரியான விதத்தில் சிங்கள மக்களிடம் சொன்னால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும்.

இந்த விடயங்கள் விளக்கமின்மையால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளனவே தவிர, நியாயமான முறையில், சிங்கள மக்களுக்கு எடுத்துரைதால், இவர்களை விடுவிப்பதற்கு எந்த சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார்.