காலமும் சூழலும் எங்கள் கலைஞர்களை வளரவிடவில்லை என்பதை அனைவரும் அறிந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில், புகைப்படபிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மூத்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த மண்மீதும் மக்கள் மீதும் பற்றுக்கொண்டவர்களாக எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
பாரதிராஜா பல தடவைகள் ஈழத்து மண்ணுக்கு வருகை தந்துள்ளார், தமிழீழ தேசியத்தலைவர் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்ட இவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் மரியாதைக்குரிய ஒருவராக நேசிக்கப்பட்டவர். இவரை மீண்டும் இந்த மண்ணில் பார்ப்பது எமக்கு கிடைத்த வாய்ப்பாகும்.
காலமும் சூழலும் எங்கள் கலைஞர்களை வளரவிடவில்லை என்பதை இங்கு வந்திருக்கின்ற இவர்கள் அறிந்து கொள்வார்கள், இவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரங்களும் வசதிகளும் எங்களுக்கில்லை.
ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த மண்ணிலேயே கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் துறைசார்ந்த விடயங்கள் துளிர் விட்டு வளர்ந்தன. கலைகளை நாங்கள் பேணியிருந்தோம்.
லண்டன் மாநகரைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணனின் அழைப்பின் பேரில் இங்கு வந்த தென்னிந்திய கலைஞர்கள் செங்கலடியில் ஒரு நிகழ்வில கலந்து கொள்ளவுள்ளனர்.
அண்ணன் கோபாலகிருஸ்ணன் அவர்கள், குருகுலம் சிறுவர் இல்லத்திற்கு சுமார் ஒன்றரைக்கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட உதவிகளைச் செய்துள்ளதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு பல்வேறுபட்ட உதவிகளை ஆற்றி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.