மனித உரிமைச்சட்டங்களை மீறிச் செயற்படும் அவுஸ்திரேலியா! ஐ.நா விடுத்துள்ள அறிவித்தல்

Report Print Ajith Ajith in அரசியல்

அவுஸ்திரேலியா பல மனித உரிமைச்சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுச் சட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமெனவும் ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் தன்னிச்சையான தடுத்துவைத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசு நவுறு தீவிலுள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரை காலவரையறையின்றி பிரித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் ஐ.நா சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் தன்னிச்சையான தடுத்துவைத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு அமைப்பின் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

ஈரானிலிருந்து வந்து புகலிடம் கோரிய எட்ரிஸ் செராகி Edris Cheragi என்ற நபர் மீது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் அவர் எவ்வித விசாரணைகளுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இதேபோன்று பலர் கட்டாயத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் நீண்டநாட்களாக புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும், எனவே, அவுஸ்திரேலியாவின் குடிவரவுச் சட்டம் மீளாய்வு செய்யப்படவேண்டும் எனவும் தன்னிச்சையான தடுத்துவைத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.