சிறையில் துமிந்த சில்வாவுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிக்கு எதிராக விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலையில் விசேட வசதிகளை வழங்கியதாக கூறப்படும் சிறைச்சாலை உயர் அதிகாரி குறித்து நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை விட துமிந்த சில்வாவுக்கு விசேடமான பல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முதல் கட்டமாக ஆராய்ந்த அமைச்சர், அதனையடுத்து விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வாவுக்கு வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து கொடுக்கப்படுகிறது.

மேலும் தினமும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் ஏனைய கைதிகளுக்கு கிடைக்காத வசதிகள் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள சிறைச்சாலை உயர் அதிகாரி தொடர்பில் அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.