இலங்கையின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு வந்து சென்ற இந்திய உளவாளி!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள றோ புலனாய்வு சேவையுடன் தொடர்புடைய இந்திய பிரஜை இரண்டு முறை தனது வீட்டுக்கு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இந்திய பிரஜை தனது கட்சியின் அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும், அப்போது தான் அங்கு இருக்கவில்லை என்பதால், அவரை சந்திக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் பொரள்ளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜை தான் இந்தியாவின் றோ புலனாய்வு சேவையுடன் சம்பந்தப்பட்டவர் என வாக்குமூலம் வழங்கியிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த நபர் இரண்டு முறை என்னை தேடி வீட்டுக்கு வந்துள்ளார். நான் வீட்டில் இருக்கவில்லை என்பதால், வாசலில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் நான் வரும் வரை வீட்டிற்கு முன்னால் அந்த நபர் இருந்துள்ளார்.

என்னை தேடி எமது கட்சி அலுவலகத்திற்கும் வந்துள்ளார். அலுவலகத்தில் நான் இருக்கவில்லை என்பதால், அங்கிருந்த ஒருவருடன் பேசி விட்டு திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த நபர் இலங்கையில் வழங்கியுள்ள பெயர் றோ அமைப்பில் வழங்கப்பட்ட பெயர் அல்ல. அந்த அமைப்பில் இந்த நபருக்கு வேறு பெயர் இருக்கலாம் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.