லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவோம்! ராஜித

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையிலான ஐக்கியத்தை சிதைக்கும் எவராக இருந்தாலும் அவர் துரோகி என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதை நல்லாட்சி அரசாங்கத்தினால், மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. அரசாங்கத்தினால், ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உரிமைகள் கிடைத்துள்ளன.

ஊடகவியலாளர்கள் தற்போது ஜனாதிபதியை விமர்சிக்கின்றனர். பிரதமரை விமர்சிக்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு ஒரு சிறிய அசம்பாவிதம் நடந்துள்ளதா?.

லசந்த விக்ரமதுங்க எங்கே. லசந்தவை கொலை செய்த கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டியது கடமையல்லவா.

எங்களை சிறையில் அடைக்க போவதாக மகிந்த ராஜபக்ச கூறுகிறார். லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த கொலையாளிகளையே நாங்கள் சிறையில் அடைக்க போகிறோம்.

லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னேலிகொட, கீத் நொயார், வசீம் தாஜூடீன் ஆகியோரே எமக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்தனர். அவர்களின் பெயர்களை பயன்படுத்தியே வாக்குகளை பெற்றோம்.

தாஜூடீனின் கொலையாளிகளை நாங்கள் தூக்கு மேடைக்கு அனுப்புவோம். லசந்தவை கொன்றவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவோம். எக்னேலிகொடவை கடத்தியவர்கள் எந்த இராணுவ வீரராக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அனுப்புவோம். 11 பிள்ளைகளை கொலை செய்த பாவிகளை தூக்கு மேடைக்கு அனுப்புவோம்.

கீத் நொயரை தாக்கியவர்களை சிறைக்கு அனுப்வோம். போத்தல ஜெயந்த, பாலசூரிய, உபாலி தென்னகோன் ஆகியோரை தாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவோம். இந்த விடயத்தில் என்னை விட ஊடகவியலாளர்களான உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்க வேண்டும்.

சிரச, சியத்த தொலைக்காட்சி நிலையங்கள் எரியூட்டப்பட்டன. இன்று அப்படி எதுவும் நடக்கின்றதா?. அரசாங்கம் குறுகிய காலத்தில் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளது.

கணக்காய்வு சட்டம், தகவல் அறியும் சட்டம் முக்கியமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் செய்துள்ளது. அதில் சில குறைகள் இருக்கலாம். கடந்த காலத்துடன் தற்காலத்தை ஒப்பிட்டு பாருங்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.