ரணில் மற்றும் மோடிக்கு இடையில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 20ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாக பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் தனது இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட சிரேஷ்ட அரசியல்வாதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது அந்நாட்டு பாதுகாப்பு பிரதானிகளை சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறி இந்திய அரசிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளார்.

இந்திய புலனாய்வு சேவையான றோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் உயர் மட்ட பாதுகாப்பு பிரதானிகளுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதுடன் இதற்கு அமைய விசேட கோரிக்கை விடுக்கவுள்ளார்.

றோ புலனாய்வு சேவை தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்து பத்திரிகையின் இந்த செய்தியை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன.

இதனடிப்படையில் இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய றோ அமைப்பு சதித்திட்டம் இருக்கின்றதா என்பதை இந்திய பாதுகாப்பு பிரதானிகளிடம் நேரடியாக கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு, பிரதமர் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்திய விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது எனினும் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்தே இந்த விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம ஆகியோருடன் பிரதமரின் செயலக அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.