மைத்திரியுடன் இந்தியத் தூதுவர் அவசர பேச்சு! மோடியின் விசேட ஓலையும் வாசிப்பு

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து இவ்விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று முற்பகல் ஜனாதிபதியை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அவசரமாகச் சந்தித்து பேச்சு நடத்தினார் என்று அறியமுடிகின்றது.

இந்தியப் பிரதமரால் விடுக்கப்பட்ட விசேட செய்தியொன்றையும் ஜனாதிபதிக்கு அவர் தெரியப்படுத்தினார் என அறியமுடிகின்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் இன்னும் வெளியாகிவில்லை. எனினும், சந்திப்பு இடம்பெற்றதை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, இந்திய உளவுப்பிரிவு குறித்து ஜனாதிபதி எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை என்றும், ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.