ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ள வடமாகாணசபை அவை தலைவர்!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

காஞ்சுரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் மற்றும் அரசாங்கம் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

காஞ்சுரமோட்டை கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் பெரும் சவாலாக இருப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 12 மாகாணசபை உறுப்பினர்கள் இன்று காஞ்சுரமோட்டை கிராமத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

காஞ்சுரமோட்டை கிராமத்தில் 1990க்கு முன்னர் அமைந்திருந்த பாடசாலையை மீள இயக்கவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

காஞ்சுரமோட்டை கிராமத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமைகளை நேரடியாக பார்த்திருக்கின்றோம். மக்கள் ஒழுங்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனடிப்படையில் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் துரிதமாக மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் ஆவண செய்வதுடன், வனவள திணைக்களம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்காமல் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு உடனடியாக கடிதம் எழுதப்படும்.

அதேபோல் காஞ்சுரமோட்டை கிராமத்தில் மீள்குடியேறும் மக்கள் பெரும்பாலானவர்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழகத்தில் முகாம்களில் வாழ்ந்துள்ளார்கள்.

அவர்கள் தற்போது நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான இழுபறிகள் குறித்து, இந்திய துணை தூதரகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

அதேபோல் காஞ்சுரமோட்டை கிராமத்திலிருந்து மக்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் அங்கு பாடசாலை இருந்துள்ளது.

அந்த பாடசாலை இருந்தமைக்கான கட்டட எச்சங்கள் காணப்படுகின்றன. ஆகவே அந்த பாடசாலையை உடனடியாக ஆரம்பிப்பதற்கும் ஆவண செய்யப்படும் என்றும் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.