பரபரப்பான சூழ்நிலையில் மோடி-மைத்திரி தொலைபேசி உரையாடல் வெளியானது

Report Print Nivetha in அரசியல்

ஜனாதிபதியை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து வெளியிட வில்லை என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் சுபீட்சத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாக இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும் நெருக்கமான தொடர்புகளையும் பேணி பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நெருங்கிய நண்பனாகவும் அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் இந்தியாவின் றோ தொடர்புபட்டுள்ளதாக வெளியானதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - அஜித்