வடக்கு முதலமைச்சருக்கு சுவிற்சர்லாந்து பெண் வழங்கிய பதில்

Report Print Sujitha Sri in அரசியல்

சுவிற்சர்லாந்து பெண்ணொருவரிடம் தாலி தொடர்பில் தான் கேட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதிலை வட மாகாண முதலமைச்சர் இன்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மரபுரிமைகள் நிலையம் யாழ். நல்லூரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிகும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழர்களின் வாழ்வின் உயரிய திருமண சின்னமாக விளங்கும் தாலியானது ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய வாழ்வியல் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இதே முறைமையை மேலை நாட்டவர்கள், ஐரோப்பியர்கள் இன்று தாமும் மணமகளுக்கு தாலி அணிவித்து ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற உயரிய தத்துவத்தை தமது வாழ்வியல் நிலைகளில் முன்நிறுத்த முயல்வது எமது உயரிய தத்துவங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நற்சான்றாக கொள்ளப்படலாம்.

நான் சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற இடங்களில் வெள்ளைக்கார இந்துக்களுடன் பழகியுள்ளேன். அவர்கள் தாலிக்குக் கொடுக்கும் மதிப்பும் மாண்பும் மெய் சிலிர்க்க வைக்கும்.

ஒரு சுவிற்சர்லாந்து பெண் காலையில் பூஜை செய்ய முன் தன் தாலியை கண்களில் ஒற்றிக் கொண்டதை கண்டுள்ளேன். ஏன் என்று கேட்ட போது 'உங்களுக்கு தெரியாதா? கணவன் நல்லாயிருக்க வேண்டும் என்பதற்காக தான்' என்றார்.

நாம் எமது பாரம்பரிய கலாச்சார வாழ்வியல் முறைமைகளை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். நாம் எவ்வாறு சிறப்புடன் வாழ்ந்து வந்தோம் என்பதை உணர்ந்து கொள்ள, அறிந்து கொள்ள முன்வர வேண்டும்.

அதற்கான ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இந்த மரபுரிமைகள் நிலைய திறப்பு விழா நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...