நாலக்க டி சில்வாவிடம் சி.ஐ.டி 9 மணிநேரம் விசாரணை: நாளைய தினமும் அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முதல்முறையாக முன்னிலையான பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாலக்க டி சில்வாவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், தனது குழந்தைக்கு உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், இன்று முற்பகல் 9.30 அளவில் அங்கு முன்னிலையான அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் மீண்டும் அவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers