இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

இடைக்கால பொறுப்பு அரசாங்கம் தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை என்ற காரணத்தினால், அது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவதில் காணப்படும் சிரமம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக இடைக்கால அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர போன்ற அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு எதிராக ஜனாதிபதியிடம் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில், அந்த கட்சியின் 15 பேர் அணி, சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கோரி அனுப்பிய கடிதம் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட போதிலும் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே இடைக்கால அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதி தரப்புடனான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். எனினும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால், சில காலம் சென்ற பின்னராவது இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கைவிட வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers