ஜனாதிபதியை கொலை செய்ய றோ சதித்திட்டம்! பெண் செய்தியாளருக்கு ஆதரவு கொடுக்கும் பிரபல இந்திய ஊடகம்

Report Print Kamel Kamel in அரசியல்

இந்திய உளவுப் பிரிவான றோ, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டுவதாக அமைச்சரவையில் பேசப்பட்ட செய்தி ஊர்ஜிதம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என தி ஹிந்து பத்திரிகை அறிவித்துள்ளது.

ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், தி ஹிந்து குழும நிறுவனத்தின் தலைவருமான என்.ராம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரியை இந்திய உளவுப் பிரிவான றோ படுகொலை செய்ய முயற்சிக்கின்றது” என்ற தலைப்பில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி சரியானது எனவும், செய்தியை வழங்கிய பெண் செய்தியாளருக்கு ஆதரவாக நிற்கப் போவதாகவும் ராம் அறிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால இது பற்றி கூறியதாகத் தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி அவ்வாறு எதனையும் கூறவில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுவு அறிக்கை வெளியிட்டதுடன், அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்னவும் அதனை வலியுறுத்தியிருந்தார்.

சுயாதீனமான பல்வேறு செய்தி மூலங்களின் ஊடாக இந்த செய்தியை உறுதி செய்த பின்னரே பிரசூரம் செய்ததாகவும் இதனால் செய்தியில் எவ்வித பிழையும் கிடையாது எனவும் ராம் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் மறுப்பு தெரிவிக்கட்டும் அதற்கு இடமளியுங்கள், கருத்து வெளியிட்டதன் மூலம் பூச்சி புழு போன்று வளைகின்றார்கள்.

எனினும் எமது செய்தியாளர் தகவல்களை உறுதி செய்து மிகவும் சரியாக செய்தியை அறிக்கையிட்டுள்ளார்” என ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.