சீனாவின் கடன் பொறியில் அரசாங்கமே நாட்டை காப்பற்றியது! அமைச்சர் மங்கள சமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் உண்மையில் சீனாவின் கடன் பொறியில் இருந்து தற்போதைய அரசாங்கமே நாட்டை காப்பாற்றியது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில பகுதியில் மாத்திரமல்லாது வான் பரப்பையும் சீனாவுக்கு சொந்தமாக எழுதிக்கொடுத்த யுகத்திற்கு அரசாங்கத்தினால் முற்றுப் புள்ளியை வைக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் விவசாயிகளின் தானியங்களை பாதுகாக்கும் களஞ்சியத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தற்போது உணர்வுபூர்வமான அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னர் நாம் பார்த்த அபிவிருத்தி உண்மையில் மக்கள் சார்பான அபிவிருத்தியல்ல.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அன்றைய அரசாங்கம் 7 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டிருந்தது.

எனினும் தற்போதும் அந்த மாவட்டத்தில் கழிவறை வசதிகள் இல்லாத 20 ஆயிரம் வீடுகள் இருக்கின்றன. முழு நாட்டிலும் 10 லட்சம் வீடுகளுக்கு கழிவறை வசதிகள் இல்லை.

குருணாகல் ஊடான கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருகின்றன. வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்படும் என்பதை கூற மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏனையோர் செய்த அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் எங்களின் பெயர்களை பதிவு செய்யவில்லை. மற்றைய நபர்கள் பெற்ற பிள்ளைக்கு நாங்கள் பெயர் வைக்க போவதில்லை.

எனினும் நாங்கள் அவற்றை திறக்கும் போது அந்த திட்டங்கள் அந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் என்கின்றனர்.

அன்று நிர்மாணிக்கப்பட்ட கப்பல்கள் வராத துறைமுகத்தை நாங்கள் இலாபம் சம்பாதிக்கும் நிலைமைக்கு கொண்டு வருவோம்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அன்று 200 ஊழியர்கள் இருந்தனர். தற்போது 600 ஊழியர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

இன்று டொலரின் பெறுமதி எந்த நிலைமையில் இருந்தாலும் நாங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. கம்பெரலிய துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 48 ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 30 ஆயிரம் இளம் கைதொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் இளம் கைதொழிலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers