மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். படுகொலை சதித் திட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எனினும், அந்த விசாரணையின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க செய்வதற்கு அரசியல் ரீதியிலான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் றோ உளவு அமைப்பு தன்னையும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தன.

எனினும், இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.