கொழும்பை ஆட்டிப் படைக்கப் போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் தென்னிலங்கையில் பேரம் பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருபெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து, தற்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனினும் இரு கட்சிகளுக்கும் இடையிலும் முறுகல் நிலை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, தனி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை கட்சிகளை இணைத்து அரசாங்கம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் தொடர்ந்து காணப்படும் முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்தில் இணைந்திருப்பது கடினம் என ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களின் அமைச்சிற்கு சொந்தமான பல நிறுவனங்களின் இயக்குனர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்த விடயம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி 106 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதற்கமைய இரண்டு கட்சிகளும் இணைந்து தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் சிக்கல் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.