வரவு செலவு கூட்டத்தொடரில் எங்களின் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும்

Report Print Theesan in அரசியல்

வரவு செலவு கூட்டத்தொடரில் நாங்கள் எடுக்கின்ற முடிவு எங்களுடைய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு பதில் சொல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வரவு செலவுத்திட்டம் என்பதற்கு அப்பால் பார்த்தோமாக இருந்தால் எங்களுடைய மக்களுடைய நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

அதைவிட இன்றைய மக்களுடைய அன்றாட தேவைகள் என்று சொல்லி பார்க்கும்போது விலைவாசிகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது.

அதைவிட இன்று பல பிரச்சினைகள் இருக்கின்றது. அரசியல் கைதிகளுடைய பிரச்சினை இன்றைக்கு சூடுபிடித்து இருந்தாலும் கூட நிலத்துக்காக போராடுகின்ற மக்கள் இருக்கின்றார்கள், காணாமல் போனவர்களுடைய பிரச்சினை இருக்கின்றது இப்படியாக பல பிரச்சினைகள் இருக்கின்றன.

எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய மாநாட்டிலேயே நாங்கள் கூறியிருக்கின்றோம் இந்த வருட இறுதிக்குள் ஒரு கால எல்லையை கொடுக்க வேண்டும் என்பதனை நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் ஜனாதிபதியை சந்தித்து அரசியல் கைதிகள் சம்பந்தமாக பேசுகின்றபோது அவர் ஒரு திகதியை வழங்குவதாகவும் எல்லாரையும் அழைத்து பிரதமர், சட்டமா அதிபர் உட்பட அனைவரையும் அழைத்து இவ் விடயம் சம்பந்தமாக ஆராய போவதாகவும் கூறுயிருக்கின்றார்.

இருந்தாலும் எங்களைப் பொறுத்தமட்டில் இந்த விடயத்திலேயே நாங்கள் மறுபரிசீலனைசெய்ய வேண்டும் என்பதிலே தமிழீழ விடுதலை இயக்கம் ஆணித்தரமாக இருக்கின்றது.

இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை ஏமாற்றக்கூடிய வகையிலே செயற்படுகிறது என்பதை சர்வதேசத்துக்கு நியாயப்படுத்துகின்ற வகையில் இந்த ஆண்டு ஒரு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.