தென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்பு வரை நேரடி விமான சேவை

Report Print Steephen Steephen in அரசியல்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முழுமையான உதவியை வழங்கவும், தென்னிந்தியாவில் இருந்து பலாலி மற்றும் மட்டக்களப்பு வரை நேரடியான விமான சேவைகளை ஆரம்பிக்கவும் இந்தியா முழுமையான உதவிகளை வழங்கும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை பொலிஸ் துறையின் ரோந்து பணிகளை மேலும் திறன்படுத்த 750 ஜீப் வண்டிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புதுடெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று சந்தித்த இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் காரணமாக இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கையில் குற்றச்செயல்களை தடுக்கும் செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ள இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் குற்றச்செயல்களை 30 வீதமாக குறைக்க முடிந்துள்ளதாகவும் கிடைத்த முறைப்பாடுகளில் 90 வீதமான முறைப்பாடுகளை தீர்க்க முடிந்தது எனவும் இங்கு கூறப்பட்டது.

மேலும் இலங்கை கிரிக்கெட் துறையில் நடக்கும் போட்டி காட்டிக்கொடுப்பு மற்றும் பந்தயம் பிடித்தல் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுக்க இந்தியாவின் உதவிகளை வழங்கவும் ராஜ்நாத் சிங் இணங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்தியா கையாண்டு வரும் பாதுகாப்பு முறைகள் மற்றும் தொழிநுட்ப பயிற்சிகளை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers