றோ அமைப்புக்கு இலங்கை அரசியல்வாதிகளை கொலை செய்யும் தேவை இருக்காது! சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

றோ அமைப்பு போன்ற தொழில் ரீதியான அமைப்பு அயல் நாடுகளில் அரசியல்வாதிகளை கொலை செய்ய முயற்சிக்கும் என தாம் எந்த வகையிலும் நம்பவில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பிரச்சினை இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது. அதனை அவர்களிடம் கேட்க வேண்டும். அப்படியான பிரச்சினை இருக்கும் என நான் நினைக்கவில்லை.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆட்சியாளர் என்று வரும் போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அவற்றை மோதலாக நான் கருதவில்லை. அவற்றை தீர்த்துக்கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.

அத்துடன் றோ அமைப்பு என்பது உலகளவில் தொழில் ரீதியாக முன்னெடுக்கப்படும் உயர்மட்ட புலனாய்வு அமைப்பு. அது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு.

அந்த அமைப்பு அயல் நாடுகளில் உள்ள தலைவர்களை கொலை செய்யும் மனநிலை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அந்த அமைப்பில் கடுமையான ஒழுக்கம் காணப்படுகிறது.

எமது புலனாய்வு பிரிவுகளில் குடிகார்கள், வயிற்றுக்கு பிழைப்பவர்கள், வெள்ளை வான், கார்கள் இருக்கின்றனர். றோ என்ற அமைப்பில் அப்படியானவர்கள் இல்லை.

இதனால், றோ அமைப்பு அயல் நாடு ஒன்றின் அரசியல்வாதியை கொலை செய்யும் நிலைக்கு செல்லும் என நான் கருதவில்லை. இந்தியாவின் றோ அமைப்பு இலங்கை அரசியல்வாதிகளை பின் தொடர்கின்றது என்று நான் நம்பவில்லை.

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பான றோ அமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையின் தலைவர்களை கொலை செய்யும் தேவை இருக்கும் என தான் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.