முஸ்லிம்களுக்கு எதிராக புலம் பெயர் விடுதலைப் புலிகள் பணம் வழங்கியுள்ளனர்! நாமல் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்க புலம் பெயர் விடுதலைப் புலிகள் பணம் வழங்கியுள்ளமை மற்றும் அவர்களுடன் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்பு பட்டுள்ளமை என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால் திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கூட்டு எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை செய்யும் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி தொடர்பில் திட்டமிட்டதாக கூறப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகிறது.

தன்னை கொலை செய்ய சதி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதியே குறைப்படும் அளவுக்கு இன்று நிலமை இருக்கிறது.

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை விசாரணை செய்யும் விதத்தில் இருந்தே இதன் பின்னணியில் பெரிய தலைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நாமல் குமார என்பவர் வெளியிடும் தகவல்களை பார்க்கும் போது இந்த சதித்திட்டங்களின் பின்னால் இருப்பவர்கள் ஜனாதிபதியை மாத்திரம் கொலை செய்ய திட்டமிடவில்லை என்பதும் இன்னும் பல்வேறு சதி திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதும் புலனாகிறது.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்க புலம் பெயர் விடுதலைப் புலிகள் பணம் வழங்கியுள்ளமை மற்றும் அவர்களுடன் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்பு பட்டுள்ளமை என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

அன்று சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க சதி செய்த அதே பின்னணிதான் இந்த முழு திட்டங்களினதும் பின்னால் இருக்க வேண்டும்.

அன்று அலுத்கமையில் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட கலவரம் தொடர்பில் நாம் பலமுறை கோரியும் விசாரணை மேற்கொள்ளாத இந்த அரசாங்கத்தின் பங்காளிகளே மிக அண்மையில் நடந்த இனமோதல்களின் பின்னால் இருந்திருக்க வேண்டும்.

தற்போது மந்த கதியில் முன்னெடுக்கும் விசாரணைகளை முறையாக மேற்கொண்டால் திகன கலவரத்தின் பின்னால் இருக்கும் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு கொள்ளமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers