கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரணை!

Report Print Mohan Mohan in அரசியல்

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட கடன் நிவாரண அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் ஒத்திவைப்பு பிரேரனையை கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் முல்லைத்தீவு நகர்பகுதியில் சிவில் சமூக வலையமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை சந்தித்து வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வதியும் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண்நிதிக் கடன்களுக்கான கடன் நிவாரணம் தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி நிதி சுற்றுநிருபம் (01/2018) 08.08.2018 அன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை பெற்றவர்களிடம் ஒரு கடனை கழித்துவிடுவது என்ற திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 3 மாத காலமாக கடனை செலுத்தாதவர்களிடம் மட்டும் ஒருலட்சம் ரூபாயை கழித்துவிடுவது என்ற நிலைப்பாடு அதில் காணப்படுகின்றது.

இதனால் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுகின்றார்கள். ஏனெனில் பல்வேறு அழுத்தமான காரணங்களினால் 3 மாதம் கடன்களை செலுத்தாத பெண்கள் மிகக்குறைவாகவே முல்லைத்தீவில் காணப்படுகின்றார்கள்.

இதனால் இந்த திட்டத்தினால் இந்த மாவட்டத்தில் கடன்பெற்ற பெரும்பாளான பெண்கள் பயனடையாத நிலையே காணப்படுகின்றது.

ஆகவே இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை சிவில் சமூக வலையமைப்பினர் இன்று கையளித்துள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது நிதி அமைச்சரிடம் இந்த கட்டுப்பாட்டை நீக்கிவிடுமாறு கோரிக்கை விடுவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் ஒரு ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவந்து இவர்களுக்கு இதில் இருந்து விலக்களிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers