நாலக சில்வாவுடன் சரத் பொன்சேகாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு: நாமல் குமார

Report Print Kamel Kamel in அரசியல்

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுடன், அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா மிக நெருங்கிய தொடர்பு பேணி வந்ததாக நாமல் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர் சரத் பொன்சேகா நேற்றைய தினம் என்னை விமர்சனம் செய்திருந்தார்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறும் விசாரணைகளின் போது நாமல் குமாரவின் உண்மை முகம் தெரியவரும் என சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இதன் மூலம் வாழைக்குலை திருடனுக்கு முன்னதாக வாழைக்குலையே காட்டிக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நான் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலங்களின் போது சரத் பொன்சேகா தொடர்பில் இரகசிய தகவல் வழங்கியுள்ளேன்.

இந்த தகவல்களை நிரூபிக்கும் வகையில் சரத் பொன்சேகா என்னை விமர்சனம் செய்கின்றார்.

நாலக சில்வாவுடன் அரசியல் ரீதியாக மிகவும் நெருங்கிப் பழகும் அரசியல்வாதி சரத் பொன்சேகா என நான் குறிப்பிட்டுள்ளேன்.

இதற்கு என்ன காரணம் என்றால் இந்த சம்பவத்தின் பின்னணியில் (ஜனாதிபதி கொலை சதித் திட்டம்) சரத் பொன்சேகா இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும்.

எனினும் அதனை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இந்த ரகசிய வாக்குமூலம் பற்றி சரத் பொன்சேகாவிற்கு தெரியாது.

சரத் பொன்சேகாவின் அண்மைய கருத்துக்கள் மூலம் எனது குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்வது புலனாகின்றது என நாமல் குமார தெரிவித்துள்ளார்.