ஜனாதிபதி வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொள்ள இதுவே காரணம்

Report Print Theesan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொண்டு மக்களின் தேவைகளை கண்டறிந்து பல சேவைகளையும் செய்திருப்பதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா - பூந்தோட்டம் முதியோர் சங்கத்தினால் முதியோர் தினமும், முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்.

நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் முதியோர்களுக்கான வேலைத்திட்டங்களை செய்கின்றோம். குறிப்பாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முதியவர்களின் குடும்ப பின்னணி, கஸ்டங்களை அடையாளப்படுத்தி அவர்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொண்டு மக்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான பல சேவைகளை செய்திருக்கின்றார்.

குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 95 வீதமான எம் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தமையே இதற்கு காரணமாகும். தற்போது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இதில் அந்தந்த மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படுகின்ற காலகட்டத்தில் வட மாகாணத்திற்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் குறை கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சகல விடயங்களுக்கும், செயல்திட்டங்களுக்கும் பாரிய ஆதரவை தருகின்றனர்.

அந்தவகையில் வட மாகாணத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் குறைவுகள் காணப்படுமாயின் அவர்கள் உயர் மட்ட சந்திப்பில் தமது பகுதிகளுக்கு எவ்வாறான குறைவுகள் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதன் மூலம் அதை நிவர்த்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.