விக்கியின் தமிழ் மக்கள் கூட்டணியை புறக்கணித்த கஜேந்திரகுமார்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நேற்று அறிவித்தார்.

இந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை.

சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக பயணித்தால் அவரது தலைமையில் இணைந்து பயணிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நல்லூரில் வைத்து முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற தனது கட்சியை பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். பங்குபற்றியிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உடன்பாடற்ற தன்மை காணப்பட்டது.

அதனை அந்தக் கட்சி பகிரங்கமாகவே கூறியிருந்த நிலையில், நேற்று விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிக்கும் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளாமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனின் கட்சியில் இணைந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது எனவும், கட்சியில் இணைந்து கொள்வதற்கு அது நிபந்தனைகளை விதித்தது எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.