விக்னேஸ்வரன் அடிப்படைவாத நிலைப்பாடுகளை கொண்டவர்: மகிந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடிப்படைவாத நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர் என்பது தமக்கு தெரியும் எனவும், அவர் இன்று நேற்றல்ல பல காலங்களாக அதே நிலைப்பாட்டில் இருந்து பேசி வருகிறார் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அரசாங்கத்திற்கு எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே அரசாங்கம் விடயங்களை கையாளும்.

அரசியலமைப்பு விவகாரம் உட்பட அனைத்து விடயங்களும் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேசப்படும். விக்னேஸ்வரன் தனிக்கட்சி தொடங்குவது என்பது அவரது வேலை.

நாங்கள் அதில் தலையிடும் தேவையில்லை. இறுதி மக்கள் வாக்களிப்பை பார்த்த பின்னரே நிலைமையை அறிந்துக்கொள்ள முடியும். விக்னேஸ்வரன் புதிய கட்சி தொடங்குவது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை.

அவர் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தினால், அது பற்றி கூட்டமைப்பிடம் கேளுங்கள். அதில் தலையிடும் அவசியம் எமக்கில்லை.

அத்துடன் இனவாத கட்சிகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இருக்கின்றன. கிழக்கிலும் இருக்கின்றன. இனவாதத்தை நாங்கள் முற்றாக கண்டிக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு தேசிய கட்சி. இனவாத கட்சியல்ல. அனைத்து அடையாளங்களை அங்கீகரித்து இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கின்றது.

இனவாத கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எந்த கொடுக்கல், வாங்கல்களும் இல்லை.

இலங்கை அனைத்து மக்களுக்கும் உரிய நாடு. துண்டு துண்டாக பிரிந்து இந்த பிரதேசத்தில் இவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அந்த பிரதேசத்தில் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நாடு அல்ல இலங்கை.

நாட்டில் உள்ள எவரும் எந்த இடத்திற்கும் சென்று வர்த்தகங்களில் ஈடுபட வாய்ப்பு வழங்க வேண்டும். அதனை விடுத்து திட்டமிட்டு சென்று குழப்பங்களை ஏற்படுத்தவும் நாங்கள் தயாரில்லை.

அங்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது எமக்கு தெரியும். பிரபாகரன்கள் வருவதற்கு முன்னர் வெதுப்பகங்களை வைத்திருந்த சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.

அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். முஸ்லிம் வர்த்தகர்களை விரட்டி விட்டனர். அந்த வரலாற்றையும் மறந்து விடக் கூடாது.

நாட்டில் உள்ள எவரும் நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று வர்த்தகங்களை நடத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிடடுள்ளார்.