காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வு செய்து தீர்மானம் எடுக்கப்படும்! ரோகித போகொல்லாகம

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் பாடசாலை, அமைப்புகளுக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பான கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த வாரம் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மற்றும் பாடசாலை காணிகளை விடுவிப்பதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

இதன் அடிப்படையில் குறித்த காணிகளை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் அகற்றப்படும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான அரச காணியை இனங்கண்டு வழங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது முறக்கொட்டாஞ்சேனை பாடசாலையில் உள்ள இராணுவமுகாமை அகற்றி அதற்கு பதிலாக புன்னைக்குடாவில் காணி வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

இதற்கு கடுமையான எதிர்ப்பினை அலிசாகீர் மௌலானா வழங்கிய நிலையில் புன்னைக்குடாவில் காணி வழங்குவது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அதனை மாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கமும் தெரிவித்துள்ளனர்.

இது காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வு செய்து தீர்மானம் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய காணி விடுவிப்புகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான மாற்று காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாடசாலை காணிகளில் படையினர் முகாம் அமைத்துள்ளதாகவும் அவற்றினை அகற்றிவேறு இடங்களுக்கு கொண்டுசென்று பாடசாலை காணியை விடுவிப்பது தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேபோன்று களுவாஞ்சிகுடி நகரில் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணியை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விடுத்தார். இது தொடர்பில் பின்னர் ஆராயப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், முதலமைச்சர் செயலகத்தின் பிரதம செயலாளர், கிழக்கு மாகாண இராணுவ தளபதி, கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers