வடக்கில் தமிழர்களின் ஆட்சி முடிவு! ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்..

Report Print Shalini in அரசியல்

வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்து, வடக்கின் ஆட்சி அதிகாரம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் கைகளுக்கு சென்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் விசேட கூட்டங்களை நடத்தி வருகின்றார்.

அந்த வகையில், யாழ். நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விசேட கூட்டத்தை நடத்தியிருந்தார்.

வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக இருக்கின்ற போதும் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்ற நிலை காணப்படுவதாகவும் இது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை காண்பிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கஷ்டப் பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளை எதிர்வரும் வாரங்களில் ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறுகிய காலத்தில் பாரிய வேலைகளைச் செய்யக் கூடிய வகையில் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் பிரத்தியேக செயலாளர் ஜே எம் சோமஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை நேற்று மாலை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

மகளீர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறை போன்றவற்றின் அதிகாரிகளை அழைத்த ஆளுநர், மாகாணசபை ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் பணிகள் முடிவடையாது இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மகளீர் விவகார அமைச்சின் ஊடாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள், மக்களுக்கான சேவைகள் மற்றும் உடனடியாக மக்களுக்கு முன்னுருமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து அதிகாரிகளும் தம்மை தயார் படுத்திக்கொள்வது அவசியமாகின்றது என்று தெரிவித்த ஆளுநர், சிறு சிறு தொழிற்சாலைகளை கைத் தொழில்களை மேற்கொள்ள முன்வருபவர்களுக்கு சிரமம் கொடுக்காது அனைத்து வசதிகளையும் அனுமதிகளையும் விரைவாக வழங்கக் கூடிய வகையிலான அலுவலகம் ஒன்றினை அமைச்சில் நிறுவிக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ்.செல்வநாயகம், ஆளுநரின் பிரதியேக செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers