இலங்கை அரசியல் சட்டக் குழப்பத்தில் அடுத்து என்ன நடக்கும்?

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2)-ன் கீழ், அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

ஒன்று பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 43 (3)-ன் படி, அமைச்சர்களின் எண்ணிக்கையையும், இலாகாக்களையும் ஜனாதிபதியால் மாற்ற முடியும். அப்படி மாற்றும்போது, அமைச்சரவை தொடர்ந்து செயல்படுவது பாதிக்கப்படாது என அசோக்பரன் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட இரண்டு நேரங்களைத் தவிர, மற்ற எந்தக் காரணத்தினாலும் ஜனாதிபதியால் பிரதமரை மாற்ற முடியாது என்கிறார் அவர்.

அதே அரசியல் சட்டப்பிரிவின், 42 (4)-ன் கீழ், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற உறுப்பினர் என்று தான் நம்பும் யாரையும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் மஹிந்தவை பிரதமராக நியமித்திருக்க முடியும் என அவர் குறிப்பிடுகிறார்.

பிரதமரை நீக்குவதற்கு குறிப்பான நெறிமுறைகள் உள்ள நிலையில் பிரதமர் ஒருவரை நீக்கிவிட்டு, இன்னொரு பிரதமரை எப்படி நியமிக்க முடியும்? எனவே, இது முழுமையான அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அசோக்பரன் கூறுகிறார்.

அரசியல் சட்டத்தின் 19-வது திருத்தத்தின் அடிப்படை நோக்கமே, ஜனாதிபதிக்கு உள்ள சர்வாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அப்படிப்பட்ட நிலையில், இந்தச் சட்டப்பிரிவு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் நீதிமன்றம் முக்கிப் பங்காற்ற வேண்டியுள்ளது.

தற்போது, இலங்கையின் பிரதமர் யார், யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பதே குழப்பமாக உள்ள நிலையில், இது மிகப்பெரிய அரசியல் சட்டக் குழப்பத்துக்கு வித்திட்டிருக்கிறது என அசோகபரன் கூறியுள்ளார்.

- BBC - Tamil

Latest Offers