சவுதி ஊடகவியலாளரின் கொலையை இலங்கை கண்டித்துள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இலங்கை அரசு கண்டிப்பதாகவும் அப்படியான சம்பவங்கள் உலகில் எந்த இடத்திலும் நடக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடக தொழிற்சங்க சம்மேளனத்தில் 7 வது பிரதிநிதிகள் மாநாடு மற்றும் புலனாய்வு செய்தி சேகரிப்பு தொடர்பான பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், சிரமமங்கள் என்பவற்றை அறிந்தவன் என்ற வகையில், அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய தனிப்பட்ட ரீதியிலும் ஊடகவியலாளர்களின் சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

நான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன்.

எனது பதவிக்காலத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை, துன்புறுத்தலுக்கு உள்ளானமை, நாட்டை விட்டு சென்றமை போன்ற எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய அரசாங்கம் பெற்ற மிகப் பெரிய வெற்றி.

ஊடகவியலாளர்களின் தொழில்ரீதியான பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அந்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.