யாருக்கு ஆதரவு? முக்கியமான தமிழ் கட்சிகள் சிலவற்றின் இறுதி தீர்மானம் வெளியானது

Report Print Shalini in அரசியல்

நேற்று இரவு புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஸவும், அரசியல் யாப்பின்படி நானே பிரதமர் என அறிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கவும் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அந்த வகையில் பலத்தை நிரூபிப்பதற்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு என்பது முக்கியமாக கருதப்படுகின்றது.

இதனால் சிறுபான்மை கட்சிகள் சில தமது ஆதரவு யாருக்கு என்பதை வெளியிட்டு வருகின்றன.

சிறுபான்மை கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் தமது ஆதரவு யாருக்கு என்ற செய்தியை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் தமத ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களை தம் வசம் கொண்டுள்ளது.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது ஆதரவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸவுக்கே என தெரிவித்துள்ளது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 2 ஆசனங்களை கொண்டுள்ளது.

மேலும், ஈ.பி.டி.பி கட்சியும் தமது ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கே என தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 1 ஆசனங்களை கொண்டுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தம்வசம் கொண்டுள்ள மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தமது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமது ஆதரவு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கே என தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அவரை சந்தித்த ஆனந்த சங்கரி, புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.