பரபரப்பான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ரணில் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பு அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் - மஹிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவை கட்சி இன்று அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வமாக வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பக்கச்சார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Latest Offers