பிரதமர் மஹிந்தவின் நியமனம் முழு அளவில் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டது

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நியமனம் முழு அளவில் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த பதவி நியமனத்தில் எந்தவொரு அரசியல் அமைப்பு சரத்தோ அல்லது சம்பிரதாயமோ மீறப்படவில்லை.

19ம் திருத்த சட்டத்தில் பிரதமர் ஒருவர் பதவி விலகியதாக கருதப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் எவை என்பது பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 46(2) சரத்தில் இந்த விடயம் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை பதவியிழந்தால் தன்னிச்சையாகவே பிரதமர் பதவியிழந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை செயற்படுவது நின்றுவிட்டால் பிரதமர் பதவியிழந்ததாக நாம் தீர்மானிக்க முடியும்.

19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் எண்ணிக்கை 30 ஆகவும் ராஜாங்க பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்தால் மட்டுமே இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். பொதுஜன ஐக்கிய முன்னணி நேற்றைய தினம் அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பதற்கு எந்த வகையிலும் அதிகாரம் கிடையாது. பிரதமரை நியமிக்கும் அதிகாரமும் பதவி நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.