அலரி மாளிகையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றை கூட்டும் வரையில் அலரி மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை எனவும், ஜனநாயக விரோத செயற்பாட்டின் எதிர்ப்பலையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜபக்ச தரப்பினர் குண்டர்களை அனுப்பி வன்முறைகளை கட்டவிழ்த்து விடக் கூடும் எனவும், கட்சித் தலைவரை ஒர் ஈ கூட மொய்க்க இடமளிக்கப்படாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை சுமார் நான்காயிரம் கட்சியின் ஆதரவாளர்கள் அலரி மாளிகை வளாகத்தில் குழுமியுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் கட்சியின் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு வருமாறும் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூட்டப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று காலை 8.00 மணி வரையில் அலரி மாளிகையை விட்டு வெளியேறச் செல்லாவிட்டால் மோசமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.