மைத்திரியின் அதிரடி முடிவுக்கு காரணமாக அமைந்த தொலைபேசி உரையாடல்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த 26ஆம் திகதி மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை முழு நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட மகிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ய போகிறார் என்ற தகவல் தெரிந்திருக்கவில்லை.

ஜனாதிபதி, தன்னை ஆட்சிக்கு கொண்டு வர பாடுப்பட்டு ஒத்துழைப்புகளை வழங்கிய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு, மகிந்த ராஜபக்சவிடம் நெருக்கமானது நிகழ்வு ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கிடைத்த மக்களை ஆணை காட்டிக்கொடுத்துள்ளதாக அந்த கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா கடந்த 25ஆம் திகதி மாலை கைதுசெய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைகளில் ஆஜராக வந்திருந்த போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நாலக டி சில்வா, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நாலக டி சில்வாவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் உரையாடியதாக கூறப்படுகிறது.

இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் ஜனாதிபதி கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாக பேசப்படுகிறது. நாலக டி சில்வா, மிகவும் முக்கியமான அல்லது இரகசியமான ஏதோ ஒரு தகவலை ஜனாதிபதியிடம் கூறியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதிகார மற்றத்திற்கு இந்த தொலைபேசி உரையாடலே மிக முக்கியமான காரணமாக இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் அரசாங்க தரப்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதி அவ்வப்போது மறைமுகமாக குறிப்பிட்டு வந்தார்.

இதனை காரணமாக கொண்டே ஜனாதிபதி, ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டு தனது பழைய தலைவரிடம் சென்றதாக கூறப்படுகிறது.

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் தரப்பை நீக்கி விட்டு தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என எண்ணும் தரப்பை தன்னுடன் இணைத்து கொள்வது ஜனாதிபதியின் திட்டமாக இருந்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தான் கூறியதை ஜனாதிபதி மறந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுப் போயிருந்தால், பூமிக்கு கீழ் ஆறடியில் புதைக்கப்பட்டிருப்பேன் எனவும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தான் தலைமறைவாக இருந்ததாகவும் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

அன்று அப்படி கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஆறடி குழியில் புதைக்க தருணம் பார்த்து காத்திருந்த நபரை தன்னுடன் இணைத்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers