பெரும்பான்மை இல்லாமையாலேயே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளனர் - இம்ரான் எம்.பி

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

மஹிந்த ராஜபக்ச தரப்பினருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையாலேயே மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களின் பங்களிப்பில் எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் மூலம் எங்களிடமே பெரும்பான்மை உள்ளது என நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளோம்.

இந்த ஊடகசந்திப்பே மஹிந்த - மைத்திரி கூட்டணியின் முதல் தோல்வி. இதன் மூலம் ஆட்டம் கண்டதாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

அவர்கள் பெரும்பான்மையை பெற எவ்வளவு முயற்சி செய்தாலும் அதை முறியடித்து நாம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்.

அரசியலமைப்புக்கு முரணான வகையில் நியமிக்கபட்டுள்ள பிரதமரை நாம் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களாக ஒன்றிணைந்து வீட்டுக்கு அனுப்பி, ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்போம்.

அதுவரை நாடுமுழுவதிலும் உள்ள ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களை பொறுமைகாக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

அலரிமாளிகையையும் எமது பிரதமரையும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இன்று இரவும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் ஆதரவாளர்களுடன் இணைந்து அலரி மாளிகையை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers