ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் மற்றுமொரு நபர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமராகும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நாட்டில் பாரியளவிலான அரசியல் மற்றும் அரசியல் சாசன குழப்ப நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது தமது தலையாய கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை ஜனநாயக ரீதியானதும், நியாயமானதுமாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு தாம் வேண்டிக்கொள்வதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினர் ஊடகங்களின் வாயிலாக அச்சுறுத்தல்கள் விடுத்து வரும் ஓர் பின்னணியில் தாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி வரையில் நாடாளுமன்றை ஒத்தி வைப்பது நாட்டின் மிகப் பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய ஆபத்து நிலைமை காணப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை ஒத்தி வைப்பது குறித்து சபாநாயகருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுத்திருக்க வேண்டுமென்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.