நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரும் ஐ.தே.கட்சியின் கல்விமான்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை தெரிவு செய்ய உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய கல்விமான்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன் மூலம் நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பிதமடையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு நிப்போன் ஹொட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட லெங்கும்தெனிய பியரதன,

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நாங்கள் ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தோம். இதன் மூலம் நாங்கள் இப்படியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கவில்லை.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் பிரதமரை நீக்குவதற்காக முறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்தும் கவனம் செலுத்தி நாட்டை பற்றி சிந்தித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியே அதிகமான ஆசனங்களை கைப்பற்றியது. நாடாளுமன்றத்தில் அதிகமான ஆசனங்களை கொண்டுள்ள கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதியுயர் பீடமான நாடாளுமன்றத்தின் கருத்தை அறிய அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இதன் போது தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை காண்பித்து ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை பலம் இருக்கும் நபருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும் எனவும் லெங்கும்தெனியே பியரதன குறிப்பிட்டுள்ளார்.