ரணிலை பதவி நீக்க மைத்திரிக்கு அதிகாரம் கிடையாது

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு அரசியலமைப்புச் சட்ட ரீதியான குழப்பத்தில் சிக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு இருந்த தன்னிச்சையான சர்வாதிகார அதிகாரத்தை நீக்கவே நாங்கள் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தோம். இதற்காகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.

பிரதமரை ஜனாதிபதியாக பதவி நீக்க முடியாது என்ற திருத்தமே இதில் இருக்கும் பிரதான திருத்தமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 42 வது சரத்தில் பிரதமரை எப்படி நியமிப்பது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள நபரையே பிரதமராக நியமிக்க வேண்டும். இதுதான் சாதாரணமான சம்பிரதாயம். 46.2,8 ஆகிய சரத்துக்களின் பிரதமரை நீக்குவதற்கான விதிமுறைகள் உள்ளன.

பிரதமர் ஒருவர் உயிரிழக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத நபராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தில் அவர் நாடாளுமன்ற பதவியை இழக்க வேண்டும்.

அதேவேளை அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை தோற்கடிக்கப்பட வேண்டும். வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து தோற்கடிக்க வேண்டும்.

இந்த ஆறு விடயங்கள் நடக்காத நிலையில், ரணில் விக்ரமசிங்க உயிருடன் இருக்கும் போது, அவர் பதவி விலகவில்லை. இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இது எதுவும் நடக்காத நிலையில், மைத்திரிபால சிறிசேன எப்படி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலக முடியும்?. சிலர் முன்வைக்கும் வாதங்களுக்கு எந்த அடிப்படைகளும் இல்லை.

நாங்கள் நாட்டில் இருக்கும் மிகப் பெரிய சட்டத்தரணிகளுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடினோம். ஜனாதிபதியின் நடவடிக்கை சட்டவிரோதமானது என அவர்கள் அனைவரும் கூறினர்.

113 உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற காரணத்தினால், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவில்லை என டளஸ் அழகப்பெரும கூறுகிறார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணியில் இருக்கும் அனைத்து தலைவர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதவாக இருப்பதை அறிந்து கொண்ட பின்னர், அவர்களால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது என்று அறிந்துக்கொண்டதன் காரணமாகவே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.